டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்கு, இந்த பேரிடர் காலத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சர்வீஸ் சேவைகளை விரிவுப்படுத்தி இருப்பது குறித்து அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சர்வீஸ்களில், முன்னுரிமைப்படுத்தப்பட்ட பழுது நீக்கும் சேவை, வழக்கமான ஐசிஇ மற்றும் மின்சார வாகனங்கள் என காப்பீடு இல்லாத இருவகை வாகனங்களுக்கும் வெள்ளம் தொடர்பான பழுது சரிபார்ப்புகளுக்கான இலவச சர்வீஸ்களை வழங்குகிறது.
மேலும் டிசம்பர் 8, 2023 முதல் டிசம்பர் 18, 2023 வரையிலான நாட்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார் சர்வீஸ் சென்டர்களுக்கு இழுத்துச் செல்லும் வசதியையும் கூடுதலாக அறிவித்துள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.
அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் சர்வீஸ் சென்டர்களில் நடத்தப்படும் சேவை முகாமில், வெள்ளப் பாதிப்பினால் வாகனங்களுக்கு உண்டான சேதங்கள் மற்றும் அவற்றுக்கு அவசியமான உடனடி பழுது நீக்கும் சேவைகள் தொடர்பான ஒரு முழுமையான செக்-அப் மேற்கொள்ளப்படும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் வாகன என்ஜின் பாதிப்படையக்கூடாது என்பதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனத்தின் இன்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களிடையே தனிநபர் மற்றும் வாகனப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவது உள்ளிட்ட பல தகவல் தொடர்பு அம்சங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் இந்த இலவச சர்வீஸ் சேவைகள் குறித்து கூறுகையில், “மிக்ஜாம் புயலுக்குப் பிறகு உண்டான பெரும் பேரழிவு நம் எல்லோரையும் வெகுவாக பாதித்து இருக்கிறது. இந்த புயல் வெள்ளத்தால் வாகனங்கள் பாதிக்கப்படுவதால் மக்கள் அனைவரும் வேறு வழியே இல்லாமல் நிற்கதியாக நிற்பதை தவிர்க்க முடியவில்லை. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதுபார்ப்பதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் கூடுதல் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த எதிர்பாராத நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி என்று போராடுகையில், மக்கள் வாகனங்களின் பழுது பற்றி சிந்திப்பதற்கான நேரமோ அல்லது வாய்ப்போ மிகக்குறைவாகதான் இருக்கும் என்று நம்புகிறோம். இதனாலேயே இந்த சர்வீஸ் சேவைகளை டிவிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்’’ என்றார்.