ராஜபாளையம் நெசவாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ஜெகதீஸ்வரி நடவடிக்கை ; கைத்தறித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

ராஜபாளையம் தொகுதியில் நெசவாளர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விகாரத்தில் உடனடியாக தீர்வு வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டார்.

ராஜபாளையம், சேத்தூர், தளவாய்புரம், புனல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கைத்தறித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். புதிய ரக பொங்கல் இலவச சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், வேலை இழந்த காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நெசவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக நெசவாளர்கள் ஏற்கெனவே ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கு.ஜெகதீஸ்வரியிடம் முறையிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஈரோடு சென்றிருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜியை நேரில் சந்தித்து, ராஜபாளையம் தொகுதி நெசவாளர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.குறிப்பாக, நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைப்பது, புதிய ரக சேலைக்கு உரிய கூலி நிர்ணயம், தேங்கியுள்ள சேலைகளை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொகுதி மக்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டுள்ள  அமைச்சர் ஜெகதீஸ்வரி, நெசவாளர் கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்துள்ளார்.

அமைச்சர் விஜய் பாலாஜி உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் நெசவாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form