மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் “தி மீடியா கிளப்” தொடக்க விழா

நாடார் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மாணவர்களின் படைப்பாற்றல், ஊடகத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “தி மீடியா கிளப்” 29.09.2026 செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் கல்விசார் தலைவர் எஸ்.இரத்தினவேலு சிறப்புரையாற்றினார். சமூக ஊடகங்களின் வளர்ச்சியையும், அவற்றை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும், உண்மையை வெளிப்படுத்துவதிலும், தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதிலும் மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மீடியா கிளப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர் உறுப்பினர்களை ஊக்குவித்த அவர், இளம் தலைமுறையினர் ஊடகத்தை ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கான கருவியாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் லிம்கா சாதனைப் பதிவாளர் குகநேசன் சோனைமுத்து, தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் ஒளிப்பதிவாளர், இயக்குநராக உருவான அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். லிம்கா சாதனைக்காக திரைப்படம் உருவாக்கிய தனது அனுபவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களையும் திரைப்படத் துறையையும் படைப்பாற்றலுடன் பயன்படுத்தி, திரைப்படத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குகநேசன் சோனைமுத்து வலியுறுத்தினார். தொடர்ந்து கற்றுக்கொள்வது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றிக்கு முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து, நண்பர்களின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அவரது வாழ்க்கை அனுபவங்களும் கருத்துகளும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தன. 

நிகழ்ச்சியில் மீடியா கிளப் இலச்சினை வெளியிடுதல், மாணவர்களின் குறும்படத் திரையிடல் மற்றும் “கேமராவிலிருந்து சினிமா வரை - காட்சிக் கதைசொல்லும் கலையை கற்றல்” என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது. மாணவர்களுக்கான மீடியா கிளப் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

கல்லூரித் தலைவர் ஏ. கோடீஸ்வரன், பொருளாளர் சிஏ. டி. தவமணி, முதல்வர் முனைவர் பி. பாலமுருகன், பேராசிரியர்கள், மீடியா கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீடியா கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர். பிருந்தா, எஸ். ஸ்ரீனிவாசன், எஸ். நியூ பிகின், எஸ். கீர்த்தனா ஆகியோர், பேராசிரியர்கள் மற்றும் மாணவப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டனர். 


Post a Comment

Previous Post Next Post

Contact Form