பசுமை விவசாயத்திற்கு ஏற்ற புதிய உரம் அறிமுகம்



திரவ வடிவில் உலகின் முதல் நானோ டிஏபி உரத்தை இப்கோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான அறிமுக விழா டெல்லியில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த உரத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும்.

 பிரதமரின் ‘சஹ்கர் சே சம்ரித்தி மற்றும் ஆத்மநிர்பர் பாரத்’ என்ற கனவை நனவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் காணொளி மூலம் பார்த்தனர்.

இப்கோ நிறுவனம் நானோ டிஏபி உரங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை குஜராத்தில் உள்ள கலோல், காண்ட்லா மற்றும் ஒரிசாவில் பரதீப் ஆகிய இடங்களில் அமைத்துள்ளது. இந்த ஆண்டு 5 கோடி நானோ டிஏபி திரவ பாட்டில்கள், 25 லட்சம் டன் டிஏபி உரத்தையும் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நானோ டிஏபி திரவ உரத்தில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூலப்பொருள்கள் உள்ளன.

 இவை பயிர்களில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடுகளை போக்குகிறது. இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (இப்கோ) சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நானோ டி-அமோனியம் பாஸ்பேட் திரவ உரமானது, உரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் கடந்த மார்ச் 2-ந்தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த உரம் உயிரியல் ரீதியாக பாதுகாப்பானதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் எச்சம் இல்லாத பசுமை விவசாயத்திற்கு ஏற்றது.

இந்த புதிய உரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ” இப்கோ தயாரித்துள்ள நானோ டிஏபி (திரவ) உரமானது, இந்தத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்கான குறிப்பிடத்தக்க தொடக்கமாகும். அதிக அளவு ரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இப்கோ நானோ டிஏபி உரமானது தரம் மற்றும் நிலப் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் உத்தரவாதம் அளிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 

இதன் 500 மில்லி பாட்டிலின் தன்மை சிறுமணி யூரியாவின் 45 கிலோ மூட்டைக்கு சமம். இது ஒரு திரவமாக இருப்பதால், நிலங்களில் ரசாயனங்களால் ஏற்படும் மாசு வெகுவாக குறையும். மண்ணில் அதிக அளவில் மண்புழுக்கள் இருந்தால் அவை உரத்தொழிற்சாலை போல வேலை செய்யும்”எனத் தெரிவித்தார்.

புதிய உர அறிமுகம் குறித்து இப்கோ தலைவர் திலீப் சங்கனி கூறுகையில், விவசாயிகளின் வருவாயை அதிகரித்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் பிரதமர் மோடியின் ‘சஹ்கர் சே சம்ரித்தி மற்றும் ஆத்மநிர்பர் பாரத்’ ஆகிய திட்டங்களுக்கு ஏற்ப இந்த நானோ டிஏபி திரவ உரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இப்கோ நிர்வாக இயக்குனர் அவஸ்தி கூறுகையில், நானோ டிஏபி திரவ உரம் பயிரின் ஊட்டச்சத்து தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எங்கள் நிறுவனம் மிகவும் புதுமையான நவீன விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து தொடர்ந்து பணியாற்றும்” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form