“பெண்களின் தடுமாற்றத்தை திறமையின்மையாக பார்க்கக் கூடாது” ; சட்டப்பேரவையில் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி பேச்சு



பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களையும், துயரங்களையும் கடந்து, அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தங்களுக்கான வலுவான இடத்தை உருவாக்கி வருகிறார்கள். முதல்வர் விஜய் அண்ணாவின் ஆதரவுடன் நாங்கள் எதையும் தாங்குவோம்; எதையும் சாதிப்போம், என்று தமிழக சட்டப்பேரவையில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅமைச்சர் கு.ஜெகதீஸ்வரி பேசினார்.

சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, ஒரு பெண்ணாக சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் கடந்து வரும் துயரங்கள் குறித்து உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார். பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளிக்கும் மிகப்பெரிய ஆதரவாக முதலமைச்சர் விஜய் அண்ணா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “ஒரு பெண்ணாக இந்தச் சமுதாயத்தில் வாழ்வதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றன, எத்தனை துயரங்களை நாங்கள் கடந்து வருகிறோம் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எங்களுக்கு இருக்கிற ஒரே பெரிய சப்போர்ட் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் தான்” என்றார்.

மேலும், “கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அண்ணனோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்போதும் அண்ணனோடு இருந்தேன்; இப்போதும் அண்ணனோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்று ஒரு தைரியமான பெண்ணாக இங்கே நின்று பேசினாலும், கையில் ஒரு பேப்பரை எடுத்துப் படிக்கும்போது ஒரு சின்ன தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால், யாரும் எதையும் எடுத்த உடனேயே கற்றுக்கொண்டு இங்கே வந்துவிடவில்லை” என்று தெரிவித்தார்.

பெண்களின் அரசியல் பங்கேற்பு குறித்துப் பேசிய அமைச்சர், “நாங்கள் தடுமாறுவதற்கு ஒரே காரணம் இது எங்களுக்கு புதிது என்பதுதான். அதைத்தவிர எங்களுக்கு கல்வி அறிவு இல்லை, திறமை இல்லை என்று அர்த்தம் கிடையாது” என்று கூறினார்.

தொடர்ந்து, “அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நம்முடைய எல்லா பெண்களுடைய குரலும் மிகவும் போல்டாகவும், தைரியமாகவும் ஒலிக்கும். அதற்கான நம்பிக்கையையும், தைரியத்தையும் எங்கள் விஜய் அண்ணா எங்களுக்கு கொடுத்திருக்கிறார்” என்று அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி உறுதிபடத் தெரிவித்தார்.

பெண்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகட்ட தடுமாற்றங்களை அவர்களின் திறமையின்மையாகப் பார்க்கக்கூடாது என்றும், புதிய பொறுப்புகளையும், புதிய களங்களையும் எதிர்கொள்ளும்போது ஏற்படும் தயக்கங்கள் அனுபவத்தின் மூலம் நீங்கும் என்றும் அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தினார்.

பெண்களின் தன்னம்பிக்கையையும், எதிர்கால சாதனைகளுக்கான உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் தனது உரையை நிறைவு செய்த அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, “எதையும் தாங்குவோம்; எதையும் சாதிப்போம்!” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form