7.8 மில்லியன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவச அடோப் எக்ஸ்பிரஸ் ஃபார் எஜுகேஷன்


புதுமையான கருவிகள் மற்றும் தளங்கள் மூலம் படைப்பாற்றல், உற்பத்தித்திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவங்களை மேம்படுத்தி வரும் உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அடோப் பள்ளிகளில் டிஜிட்டல் படைப்பாற்றல், ஏஐ திறன்கள் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில், இந்தியாவில் தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, அசாம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளுடன் இணைந்து ஒரு புதிய உத்திசார் திட்டத்தை அறிவித்துள்ளது.  புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளுக்கு 'அடோப் எக்ஸ்பிரஸ் ஃபார் எஜுகேஷன்' செயலியை அடோப் இலவசமாக வழங்கும். இந்த டிஜிட்டல் மீடியா செயலியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் 7.8 மில்லியன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடோப்பின் கே-12 பள்ளி கல்விச் சேவையின் பலன் சென்றடையும்.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடோப் டிஜிட்டல் அகாடமியின் கீழ் டிஜிட்டல் படைப்பாற்றல் மற்றும் ஏஐ திறன் மேம்பாட்டுப் பாடத்திட்டங்களை அணுக முடியும். இது எதிர்காலத்திற்குத் தேவையான கற்றல் முறை குறித்த தேசியக் கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான ஆக்கப்பூர்வமான சிக்கல் தீர்க்கும் திறன், டிஜிட்டல் கதை சொல்லல் மற்றும் ஏஐஉதவியுடன் உள்ளடக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற உதவும். வகுப்பறை கற்பித்தலில் டிஜிட்டல் படைப்பாற்றலை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளித் திட்டப் பணிகள் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த வெளிப்பாடுகளுக்கு அடோப் எக்ஸ்பிரஸைப் பயன்படுத்துவர்.

இந்த முன்முயற்சி தற்போது பிஎம் ஸ்ரீ, சிஎம் ஸ்ரீ கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள், கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பிற அரசுப் பள்ளி நெட்வொர்க்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், காலப்போக்கில் கூடுதல் பள்ளிகளுக்கும், மாநிலங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இன்றைய அறிவிப்பு, இந்தியா முழுவதும் படைப்பாற்றல், ஏஐ திறன்கள் மற்றும் டிஜிட்டல் புதுமைகளை விரிவுபடுத்துவதற்கான அடோப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் ஒரு புதிய மைல்கல் ஆகும். இந்தியாவின் அடுத்த தலைமுறை திறமையாளர்களிடையே ஏஐ அடிப்படையிலான படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறனை வேகப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டில்' , அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக ஃபயர்ஃபிளை, போட்டோஷாப், அக்ரோபேட் போன்ற தொழில்துறையில் முன்னணியில் உள்ள செயலிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அடோப் அறிவித்திருந்தது.

அடோப்பின் உலகளாவிய கல்விப் பிரிவின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான மாலா சர்மா கூறுகையில், "இந்தக் கூட்டாண்மையின் மூலம், வகுப்பறைகளுக்குப் பயன்படக்கூடிய அடோப் எக்ஸ்பிரஸ் போன்ற ஏஐ கருவிகளை நேரடியாகப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்கிறோம்; இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்காலப் பணிகளுக்குத் தேவையான படைப்பாற்றலையும், ஏஐ திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவும். இக்கூட்டாண்மை இந்தியாவில் கல்விக்கான அடோப்பின் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது; எதிர்காலத் தயார்நிலைக்காகப் படைப்பாற்றல் திறன்களை வளர்க்க டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஏஐ பயன்பாட்டை வலியுறுத்தும் அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவளிப்பதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையில் இரண்டு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 2026 மத்திய பட்ஜெட்டின் இலக்கிற்கும் துணைபுரிகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form