அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மூலிகைப் பூங்காவைத் திறப்பு



 இந்தியாவின் முன்னணி வேளாண் தீர்வு நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட், திருச்சோபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மூலிகைப் பூங்காவைத் திறந்து வைத்திருப்பதோடு, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிறஉள்கட்டமைப்புகளை வழங்கி சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

கோரமண்டலின் 'கோரோ ஆரோக்கியா' திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த முன்முயற்சியானது, கடலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி பஞ்சாயத்துகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு அடிப்படைச் சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதையும், நோய் தடுப்பு முறைகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சித்த மருத்துவத்தின் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையில், பாரம்பரிய நல்வாழ்வு முறைகளை ஊக்குவிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் ஒரு பிரத்தியேக சித்த மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நோயாளிகளுக்கான சேவையை மேம்படுத்தவும், அவர்களின் வசதிக்காகவும் நோயாளி இருக்கைகள், மேசைகள், நாற்காலிகள் மற்றும்  மருத்துகளைப் பத்திரமாக பாதுகாக்கும் சேமிப்பகங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், அத்தியாவசிய மருத்துவக் கருவிகளையும் கோரமண்டல் நிறுவனம் வழங்கியிருப்பதன் மூலம் தனதுபங்களிப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது.

திருச்சோபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும்சித்த மூலிகைப் பூங்காவின்தொடக்க விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார், உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராமத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், கோரமண்டல் நிறுவனத்தின் சார்பில் பயோ - ப்ராடக்ட்ஸ் துறையின் வர்த்தகப் பிரிவின்தலைமை நிர்வாகியும், துணைத் தலைவருமான சீனிவாசன் கே.பி, சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டுப் பிரிவு தலைவர் ஜெயகோபால் சதுர், பயோ - ப்ராடக்ட்ஸ் துறையின் உற்பத்தி மையத் தலைவர் மற்றும் துணை பொது மேலாளர் அசோக் பாலாஜி. எஸ். மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி பஞ்சாயத்துகளைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில்சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலமும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சித்த மூலிகைப் பூங்கா, சித்தர் காயகல்பம், பிராணாயாமம், யோகம் மற்றும் வர்மத் தொக்கணம் போன்ற நல்வாழ்வு சிகிச்சை முறைகளுக்கு உறுதுணையாக இருக்கும். அதேவேளையில்,  கோரமண்டல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள மருத்துவ உதவிகள் சிகிச்சையின் தரத்தையும் நோயாளிகளின் அனுபவத்தையும் மேம்படுத்தும்.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், "திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பது கிராமப்புற மக்களிடையே பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த முன்னெடுப்பாகும். ஆரம்ப சுகாதாரத்துடன் சித்த மருத்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், மக்கள் எதிர்பார்க்கும் முழுமையான சிகிச்சை முறைகளை நாங்கள் வழங்குகிறோம். ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறனை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் தமிழ் நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படும் கோரமண்டல் இண்டர்நேஷனல்  நிறுவனத்தின் இந்தச் சிந்தனைப்பூர்வமான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றார்.

கோரமண்டல் இண்டர்நேஷனல்  நிறுவனத்தின் பயோ - ப்ராடக்ட்ஸ் துறையின் வர்த்தகப் பிரிவின்தலைமை நிர்வாகியும், துணைத் தலைவருமான சீனிவாசன் கே.பி. கூறுகையில், "நம்பகமான சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைப்பது என்பது சமூக நலனின் அடிப்படையாகும். பாரம்பரிய மருத்துவம் மற்றும் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நோய்த்தடுப்பு மற்றும் அடிப்படை சுகாதாரத் தேவைகள் இவை இரண்டையும் நிவர்த்தி செய்வதன் மூலம், முழுமையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form