இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் உலகளாவிய புகழ்பெற்ற நிறுவனமும், டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஒரு அங்கமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கடற்படை தனது ‘ஃப்ளீட் டு ஃபோர்ட்ஸ்’ மோட்டார் சைக்கிள் பயணத்தை மும்பை நேவிநகரில் உள்ள கோஹ்லி மைதானத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தது.
14 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயணம் 1,600 கி.மீ-க்கும் அதிகமான தொலைவைக் கொண்ட மாபெரும் பயணமாகும். மேலும், இப்பயணத்தில் "இந்தியாவின் மராட்டிய ராணுவதளங்கள் இருந்த பகுதிகள்" என்ற பிரிவின் கீழ் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளையும் இக்குழு சென்றடைய உள்ளது அதேபோல், சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் தொடர்புடைய 10 கோட்டைகளையும் கடந்து செல்லும் அருமையான பயணமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கடற்படையின் வேலைவாய்ப்புகள் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த மோட்டார் சைக்கிள் பயணம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்பயணத்தின் போது, முப்படைகளிலும் அதிகாரி அந்தஸ்திற்கு கீழ் உள்ள பணிகளுக்கான மத்திய அரசின் குறுகிய கால பணியமத்தும் திட்டமான 'அக்னிபத்' திட்டம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை இக்குழுவினர் உருவாக்குவார்கள்.
கேப்டன் சேகர் தேஷ்பாண்டே தலைமையிலான இந்த 25 பேர் கொண்ட குழுவில் அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் அக்னி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்கள் மற்றும் கடற்படை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்; இதன் மூலம் இந்திய கடற்படையின் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) கொள்கை இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் உட்புற நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகச் செல்லும் இந்த சாகசப் பயணப் பாதையை, இந்திய கடற்படையின் ரைடர்கள் டிவிஎஸ் ரோனின் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்யவுள்ளனர். இந்திய கடற்படையுடனான இந்த ஒருங்கிணைந்த முயற்சி, இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை வடிவமைத்த வரலாற்று நிலப்பரப்புகளின் வழியே தேடல், சாகசம் மற்றும் நட்பின் கதைகளை இளம் இந்தியர்களிடம் கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஆற்றிய உரையின் போது, மேற்கு கடற்படைப் பிரிவின் தலைமைப் படை அதிகாரி வைஸ் அட்மிரல் ராகுல் விலாஸ் கோகலே பேசுகையில், "இந்திய கடற்படை சர்வதேசக் கடல் பரப்பில் தொடர்ந்து ஒரு மேலாதிக்கச் சக்தியாக விளங்கி வருகிறது; அதன் சாகச உணர்வு, புதிய புதிய சாகசங்களை மேற்கொள்வது மற்றும் பொதுமக்களுடனான நல்லுறவை விரிவுபடுத்தும் நோக்கம் ஆகியவை இந்த ‘ஃப்ளீட் டு ஃபோர்ட்ஸ்’ மோட்டார் சைக்கிள் பயணத்தில் மிகச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் ஒரு தொலைநோக்குப் பார்வை, வீரம், நேர்த்தியான கட்டமைப்பு, சவால்களை எதிர்கொள்ளும் உறுதி மற்றும் வலிமையான ராணுவத் திறனைக் கட்டமைக்கும் ஆற்றல் ஆகியவற்றின் அழியாத சான்றுகளாக இந்தக் கோட்டைகள் நிலைத்து நிற்கின்றன. இந்தியாவின் உள்நாட்டு கடல்சார் வலிமையைக் கட்டமைப்பதில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய கடற்படைக்கு என்றென்றும் ஊக்கமளிக்கும் ஆதாரமாக விளங்குகிறார்" என்று குறிப்பிட்டார்.
.jpg)