தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸஸ் நிறுவனம், தமிழ்நாட்டின் மதுரையில் 'யாழி - தி கிராண்ட் கூடல்' என்ற பிரீமியம் திருமண மற்றும் கொண்டாட்டங்களுக்கான மண்டபத்தை அறிமுகப்படுத்தியது. டிஎல்இ நிறுவனத்தின் முதலாவது 'கல்யாண மண்டபம்' ஆன 'யாழி', திருமண நிகழ்வுகள், வரவேற்புகள், நிச்சயதார்த்த விழாக்கள் மற்றும் சமூகக் கொண்டாட்டங்கள் அனைத்திற்குமான முழுமையான ஓர் இடமாக அமைந்துள்ளது.
'யாழி'க்காக மதுரை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை, பண்டைய காலத்தில் 'கூடல்' என்று அழைக்கப்பட்டது-அந்தப் பெயரைத்தான் 'யாழி' தனது பெயரிலும் முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. திருமணமே புராணம், திருவிழா மற்றும் அன்றாட வாழ்க்கையோடு பின்னப்ப்பட்டுள்ள ஒரு நகரத்தில், திருமணத்திற்கென்றே ஒரு பிரத்யேக அரங்கம் அமைவது மதுரை நகரின் நிலப்பரப்பிற்கு ஒரு புதிய சேர்க்கை என்பதை விட, அதன் இயல்பான தொடர்ச்சியாகவே அமைகிறது.
1.44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'யாழி - தி கிராண்ட் கூடல்', திருமண நிகழ்வுகள் அனைத்தும் எவ்வித அலைச்சலுமின்றி ஒரே இடத்தில் சுலபமாகவும் தடையின்றியும் நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியாக 10,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பிரதான விழா அரங்கம் திகழ்கிறது. இதில் 850-க்கும் மேற்பட்டோர் அமரவும், 1,500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லவும் வசதி உள்ளது. 6,300 சதுர அடியில் அமைந்துள்ள உணவருந்தும் கூடத்தில் ஒரே நேரத்தில் சுமார் 350 பேர் அமர்ந்து உணவருந்தலாம். இங்குள்ள வசதியான 5 விருந்தினர் அறைகள், பரந்த பார்க்கிங் வசதி, எளிதில் வந்தடையும் வகையில் அமைந்துள்ள மண்டபத்தின் அமைவிடம் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், இங்குள்ள நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, கொண்டாட்டங்கள் முழுவதும் மிகச் திறம்பட பெருமளவிலான உணவுகளைத் தயாரித்து வழங்க வழிவகை செய்கிறது.
இந்தத் தொடக்கம் குறித்துத் தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் எம்.சி கூறுகையில், "குடும்பங்கள் சிரமமற்ற, தொழில்முறையில் நேர்த்தியாக நிர்வகிக்கப்படும் திருமண கொண்டாட்ட அனுபவங்களை விரும்புகின்றன. கோயில் திருமணங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களின் ஆழமான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்நாடு, எங்களின் தொலைநோக்குப் பார்வைக்கு மிகவும் இயல்பான தேர்வாக அமைந்தது. அதேவேளையில், நூற்றாண்டுகளாகக் கொண்டாட்டமும் பக்தியும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள மதுரை நகரம், இதைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான மிகச் சரியான களமாக அமைந்தது. டிஎல்இ நிறுவனத்தின் அடையாளமான அன்பான விருந்தோம்பல், சிறப்பான வசதி மற்றும் ஒவ்வொரு சிறிய விஷயத்திலுமான தனி அக்கறையை வழங்குவதே 'யாழி'யின் வழியான எங்களது முயற்சியாகும்" என்றார்.
